*இரவு முழுவதும் காட்டில் சடலத்துடன் தவித்த சிறுவன்
திருமலை : அன்னமய்யா மாவட்டம் புங்கனூர் வனப்பகுதியில் குடியாத்தம் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியாமல் இரவு முழுவதும் காட்டில் அவரது சடலத்துடன் மகன் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த வாலிபர் காந்தி. இவர் மனைவி ராசாத்தி, மகன் சந்தீப்(5).
இவர்கள் ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் புங்கனூரில் தங்கி கூலி வேலை செய்து அங்கேயே வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலையில் போயக்கொண்டா வனப்பகுதியில் காந்தி தனது நண்பர்கள் சிலருடன் மது அருந்துவதற்காக சென்றார். தந்தை செல்வதால் அவர்களுக்கு தெரியாமல் மகன் சந்தீப்பும் பின்தொடர்ந்து சென்றான்.
இந்நிலையில் காந்தி உள்பட அனைவரும் மது அருந்திக்கொண்டிருந்தபோது சந்தீப் வனப்பகுதியில் மறைந்திருந்து பார்த்துகொண்டிருந்துள்ளான். அப்போது திடீெரன உடன் வந்த நண்பர்கள் அனைவரும் சேர்ந்து காந்தியை அடித்து கொலை செய்து தப்பி சென்றார்களாம். இதனை மறைந்திருந்த சந்தீப் பார்த்த நிலையில் அவர்கள் சென்ற பிறகு அருகில் சென்று தனது தந்தை காந்தியை எழுப்ப முயன்றான்.
ஆனால் அப்போதே காந்தி இறந்துவிட்டதாலும் இருள் சூழ்ந்த நிலையில் சந்தீப் என்ன செய்வதென்று தெரியாமல் தனது தந்தை சடலத்துடன் இரவு முழுவதும் இருந்தான். பின்னர் விடிந்ததும் நேற்று காலை காட்டிலிருந்து 2 கி.மீ தூரம் நடந்து சென்று பக்ஷிராஜபுரத்தில் உள்ள ஒரு அங்கன்வாடி ஆசிரியரிடம் நடந்ததை கூறினான். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து புங்கனூர் ஊரக காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாய்பிரசாத், எஸ்.ஐ. சின்னரெட்டன்னா மற்றும் போலீசார் சிறுவன் சந்தீப் சொன்ன இடத்திற்கு சென்றனர். அங்கு காந்தி சடலத்தை பார்த்த போலீசார் பிரேத பரிசோதனைக்காக புங்கனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில் சிறுவன் சந்தீப் கூறிய தகவலின் அடிப்படையில் காந்தியின் நண்பர் நரசிம்மலு மற்றும் மேலும் இருவர் கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது. கொலைக்கு பிறகு காந்தியின் மனைவி ராசாத்தி மற்றும் காந்தியின் நண்பர் நரசிம்மலு திடீரென மாயமாகி விட்டார்களாம்.
எனவே திருமணத்திற்கு புறம்பான உறவு காரணமாக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும் சந்தேகப்படும் இருவரை கைது செய்திருப்பதாகவும் அவர்களிடம் விசாரணைக்கு பிறகு மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தெரிவித்தனர். வாலிபரை நண்பர்களே அடித்து கொலை செய்துள்ளதும் தந்தையின் சடலத்தின் அருகே மகன் இரவு முழுவதும் தங்கியிருந்த தகவலும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
