மினாப் 168: ரத்தத்தில் மூழ்கிய புத்தகம், ஷூ, ஸ்கூல் பேக்.. அமெரிக்காவை நடுங்க வைக்கும் ஈரானின் செயல்!

இஸ்லாமாபாத்: ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தலைமையிலான அரசு அதிகாரிகள் குழு, அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இஸ்லாமாபாத் வந்தனர்.

ஈரான் அரசின் முக்கிய அதிகாரிகள் வந்த விமானத்தில் போரில் அமெரிக்க ஏவுகணை தாக்குதலால் பாதிக்கப்பட்ட மினாப் பள்ளி மாணவர்களின் இரத்தம் படிந்த ஸ்கூல் பேக், காலணிகள், வெள்ளைப் பூக்கள் மற்றும் புகைப்படங்களை உடன் எடுத்துச் செல்லப்பட்டது.

இவற்றை ஈரான் அதிகாரிகள் செல்லும் விமானத்தில் முன் வரிசையில் வைக்கப்பட்டிருந்தன. இது மத்திய கிழக்கில் நடைபெறும் போரில் மனிதாபிமானமற்ற செயலை அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் நினைவூட்டும் வகையில் ஈரான் செய்துள்ளது.

பாகிஸ்தான் தான் இந்த பேச்சுவார்த்தைக்கு இஸ்லாமாபாத் டாக்ஸ் என் பெயரிட்டுள்ளது. மேலும் அந்நாட்டில் தற்போது நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு அனைத்து விதமான எரிசக்தியையும் மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி வரும் வேளையில் இந்த முக்கியமான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.

மினாப் 168 அமைதிக் குழு

ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அனுப்பிய இந்தக் குழு, மினாப் 168 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயர், போரின் முதல் நாளில் அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த 168 பள்ளி மாணவர்களின் நினைவாக வைக்கப்பட்டது. போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்துடன் இஸ்லாமாபாத் செல்லும் இந்தக் குழு, அந்தச் பள்ளி மாணவர்களின் துயரத்தை உலகுக்கு நினைவூட்டும் விதமாக இந்த பெயருடன் இஸ்லாமாபாத்திற்கு பயணத்தை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவின் மறுப்பும் உண்மை வெளியீடும்

அமெரிக்கா தொடர்ந்து மினாப் பள்ளியைத் தாக்கியதாக வரும் குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முறை விமானத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, “அது ஈரான் செய்ததாகவே நாங்கள் நினைக்கிறோம். ஏனெனில் அவர்களின் ஆயுதங்கள் துல்லியமற்றவை” என்று கூறியிருந்தார்.

ஆனால் தி நியூயார்க் டைம்ஸ் அறிக்கையில், அந்தப் பள்ளிக் கட்டடத்தின் மீது டொமாஹாக் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றது, இது அமெரிக்க ராணுவத்தின் இலக்கு தவறுதலால் ஏற்பட்டது என்று தெரிவிக்கிறது. இந்த ஏவுகணையைப் பயன்படுத்தும் ஒரே நாடு அமெரிக்கா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்மட்ட ஈரான் குழு

ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்தபடி, இஸ்லாமாபாத்-ல் அமெரிக்காவுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தலைமையிலான குழு பாகிஸ்தானில் தரையிறங்கியுள்ளது. இவருடன் ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் அபாஸ் அரக்சி, பாதுகாப்பு கவுன்சில் செயலர் அலி அக்பர் அஹ்மதியான், மத்திய வங்கி ஆளுநர் அப்துல் நாசர் ஹெம்மதி மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

ஈரான் அரசு விமானங்கள் IRAN04 மற்றும் IRAN05 ஆகிய இரண்டு விமானங்களில் பயணித்து இந்தக் குழு இஸ்லாமாபாத் சென்றுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் இந்த முக்கியமான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

பாகிஸ்தான்

இது கூட்டம் பாகிஸ்தான் வரலாற்றில் மிகவும் முக்கியமான நாளாக அந்நாடு கருதுகிறது. மேலும் இந்த கூட்டம் நடைபெறும் 5 நட்சத்திர ஹோட்டலான Serena Hotel சுற்றி 3 கிலோமீட்டருக்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்த ஹோட்டலும் பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது. சுமார் 10000 பாதுகாப்பு அதிகாரிகள் உடன் 3 கிலோமீட்டர் சுற்றி பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அமெரிக்கா தரப்பில் இருந்து சுமார் 30 பேர் இஸ்லாமாபாத் வந்துள்ளனர் என டான் செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Exit mobile version