ராமதாஸிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலத்தில் நேற்று இரவு (ஏப்ரல் 12) நடைபெற்ற பாமக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், மேடையிலேயே திடீரென மயக்கமடைந்தார்.

சேலத்தில் தனது அணி வேட்பாளர்களை ஆதரித்து மருத்துவர் ராமதாஸ் உரையாற்றிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரென ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் மேடையிலேயே மயங்கி விழுந்ததால், அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டது.

இந்தத் தகவல் அறிந்தவுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று காலை தொலைபேசி வாயிலாக மருத்துவர் ராமதாஸைத் தொடர்பு கொண்டு பேசினார். ராமதாஸின் தற்போதைய உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் முதல்வர் விரிவாகக் கேட்டறிந்தார்.

மருத்துவர் ராமதாஸ் விரைவில் முழு உடல்நலம் பெற்று மீண்டும் மக்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என முதல்வர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். அரசியல் ரீதியாக இரு துருவங்களாக இருந்தாலும், ஒரு மூத்த தலைவரின் உடல்நலன் கருதி முதல்வர் ஸ்டாலின் காட்டிய இந்த மனிதநேயம் அரசியல் நாகரிகத்தின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது.

மருத்துவர் ராமதாஸ் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் ஓய்வெடுத்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது இன்றைய தேர்தல் பிரச்சாரப் பயணங்களில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version