எதிர்ப்புகளைத் தகர்த்த அழகி: ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜோதி மலர் சர்வதேசப் போட்டிக்குத் தகுதி!

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள தெற்கு காக்கூரைச் சேர்ந்தவர் ஜோதி மலர். விவசாயக் குடும்பப் பின்னணியைக் கொண்ட இவர், பி.டெக் முடித்துவிட்டு, தற்போது பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
சமீபத்தில், புனேயில் அமைதி, சுற்றுச்சூழல், சுற்றுலா மற்றும் கலாச்சாரத்தை வலியுறுத்தி நடைபெற்ற தேசிய அழகிப் போட்டியில் இவர் பங்கேற்றார். அதில் ‘மிஸ் டூரிசம் அம்பாசிடர் ஹெரிடேஜ் இந்தியா 2025’ பட்டத்தை வென்று, பெரும் சாதனை படைத்தார். இதன் மூலம், வரும் நவம்பர் 8ஆம் தேதி தாய்லாந்தில் நடைபெறவுள்ள ‘மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025’ போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ளத் தகுதி பெற்றுள்ளார்.
சினிமா மீதான ஆர்வம் தான் தன்னை இந்தப் பாதைக்குக் கொண்டு வந்ததாக ஜோதி மலர் கூறுகிறார். கல்லூரியில் படிக்கும்போதே அழகிப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியுள்ளது. “சிறு வயதிலிருந்தே நான் கருப்பாகவும், சுருண்ட முடி உடனும் இருந்ததால், திருமணத்தில் அதிக நகை போட வேண்டி வரும் என்று பெற்றோர் கேலியாகச் சொல்வார்கள். ஆனால், கண்ணாடியில் நான் அழகாகவே தெரிந்தேன். ஏன் மற்றவர்கள் அழகாக இல்லை என்று சொல்கிறார்கள் என்ற கேள்விக்கு விடை தேடியபோதுதான், தன் நிறத்தின் அடிப்படையில் சமூகம் மதிப்பிடுவதை உணர்ந்தேன்,” என்று அவர் தெரிவித்தார்.
திரைப்படத் துறையில் ஒரு குறிப்பிட்ட நிறம், உருவம் ஆகியவற்றை மட்டுமே அழகு என்று சித்தரிப்பது, மற்றவர்களை அழகில்லை என்ற வட்டத்துக்குள் தள்ளிவிடுகிறது. முன்னர் எம்.ஜி.ஆர். போல வெள்ளையாக இருப்பதுதான் அழகு என்ற மாயை இருந்தது. ரஜினிகாந்த், விஜயகாந்த், தனுஷ் போன்றோரின் வருகைக்குப் பின் நிறத்தை மட்டுமே வைத்து அழகை மதிப்பிடும் போக்கு ஓரளவுக்கு மாறியது. இருப்பினும், பெண்கள் நிறமாக இருப்பதுதான் அழகு என்ற கருத்து ஆழமாகப் பதிந்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட வடிவிலும், நிறத்திலும் இருப்பவர்களைத் திரையில் தொடர்ந்து காட்டினால், அவர்களைப் போன்ற அனைவரையும் உலகம் அழகு என நம்பும் என்ற புரிதல் வந்த பிறகு, சினிமாவுக்கு வர வேண்டும் என்ற ஆசை ஜோதி மலருக்கு அதிகமானது. மாடலிங் மூலம் எளிதாகத் திரையுலகிற்குள் நுழைய முடியும் என்பதை அவர் அறிந்தார்.
சென்னையில் மாடலிங் பயிற்சி நிறுவனத்திற்குச் சென்றபோது, அங்கிருந்தவர்கள் தன்னுடைய நிறத்தை வைத்துத் தன்னம்பிக்கையைக் குறைக்கும் விதமாகப் பார்த்தது அவருக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. மேலும், நண்பர்கள் மூலம் ஒரு தொலைக்காட்சித் தொடரில் வேலைக்காரப் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோதும், அங்கும் அவருடைய நிறத்தை வைத்தே மதிப்பிட்டது அவருக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.