வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த கடும் விமான விபத்தில் ஏழு பேர் உயிரிழந்ததுடன், பதினொன்று பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கென்டக்கி மாநிலத்தின் லூயிஸ்வில் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சரக்கு விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர், விமானம் தரையில் விழுந்து சிதறி, வெடித்து தீப்பற்றியது.
அந்த இடம் முழுவதும் தீயும் புகையும் சூழ்ந்த நிலையில், நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். ஆயிரம் கிலோ எரிபொருள் விமானத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதனால் ஏற்பட்ட வெடிப்பு விபத்தின் தாக்கத்தை அதிகரித்தது.
மாநில கவர்னர் ஆண்டி பெஷியர் தெரிவித்ததாவது, விபத்தில் 7 பேர் உயிரிழந்ததையும், 11 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.
சம்பவத்தில் சிக்கிய விமானம் 34 ஆண்டுகள் பழமையானது; 2006ஆம் ஆண்டு முதல் சேவையில் இருந்தது என அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில், தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) விபத்து குறித்த விசாரணையை தொடங்கியுள்ளது. இதற்கிடையில், விமானம் விழுந்து தீப்பற்றிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
