மருத்துவ பரிசோதனையில் புதிய முன்னேற்றம் – ரத்தச் சர்க்கரை அளவைக் கண்டறிய சென்னை ஐஐடி கருவி

????????????????????????????????????????????????????????????

சென்னை:
சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை எளிதாக கண்காணிக்கக்கூடிய, கை கடிகாரம் வடிவிலான ஒரு புதிய சாதனத்தை உருவாக்கியுள்ளனர். இந்த சாதனத்திற்கான காப்புரிமையும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டின் மொத்த மக்களில் சுமார் 9% பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சர்க்கரை அளவைக் கண்டறியும் மருத்துவ சாதனங்கள் மற்றும் பரிசோதனை முறைகளின் தேவை அதிகரித்து வருகிறது.

தற்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் தொடர்ச்சியான குளுக்கோஸ் கண்காணிப்பு (CGM) முறையில், நோயாளியின் தோலில் ஒரு சிறிய சென்சார் பொருத்தப்படுகிறது. இதில் உள்ள மெல்லிய ஊசி, தோலுக்குள் சென்று ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பதிவுசெய்கிறது. ஆனால், இந்த சாதனத்தை சில வாரங்களே பயன்படுத்த முடியும்; பின்னர் மாற்ற வேண்டியிருப்பதால் செலவும் அதிகம்.

இந்த குறைகளை நீக்கும் வகையில், சென்னை ஐஐடி குழு உருவாக்கியுள்ள இந்த ‘ஸ்மார்ட் வாட்ச்’ வகை கருவி, தோலில் சிறிய சென்சாரின் உதவியால் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை தானாக அளவிடுகிறது. ஒரு மில்லிமீட்டர் நீளமுள்ள சிறிய ஊசி, தோலின் மேற்பரப்பிலேயே செயல்பட்டு, தகவலை நேரடியாகக் கை கடிகாரத்தின் திரையில் காட்டும். ஊசியை மட்டும் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது.

இந்த புதுமை குறித்து ஐஐடி சென்னை உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல் துறையின் பேராசிரியர் பரசுராமன் சுவாமிநாதன் தெரிவித்ததாவது:
“நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி ரத்த மாதிரி எடுப்பதற்காக விரலில் ஊசி குத்த வேண்டிய அவசியத்தை இது குறைக்கும். இதன் மூலம் சர்க்கரை அளவை கண்காணிப்பது மிகவும் எளிதாகும்,” என்றார்.

Exit mobile version