டில்லி விமான நிலையத்தில் தொழில்நுட்ப சிக்கல் – பல விமான சேவைகள் பாதிப்பு
புதுடில்லி: டில்லி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு (ATC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறின் காரணமாக, நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை தாமதமடைந்துள்ளன.
விமான நிலைய நிர்வாகம் தெரிவித்ததாவது:
“ATC மையத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட சாப்ட்வேர் பிரச்சினை காரணமாக சில முக்கிய செயல்பாடுகள் தடைபட்டன. இன்ஜினியர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் கோளாறை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் விளைவாக, டில்லியில் இருந்து புறப்படும் மற்றும் பிற நகரங்களில் இருந்து வரும் விமானங்களின் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது,” என அதிகாரிகள் கூறினர்.
பயணிகளின் சிரமத்திற்கு வருந்துவதாகவும், சேவை விரைவில் மீண்டும் வழமையான நிலைக்கு வரும் என்றும் நிர்வாகம் உறுதியளித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட விமான நேர அட்டவணைகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
இதற்கிடையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில்,
“ATC தொழில்நுட்ப கோளாறால் டில்லி வழித்தடத்தில் பல புறப்பாடுகள் மற்றும் வருகைகள் தாமதமாகியுள்ளன. பயணிகள் தங்கள் விமான நிலையை சரிபார்க்க spicejet.com/#status என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம்,” என்று கூறப்பட்டுள்ளது.
