வெடிகுண்டு மிரட்டல் சந்தேகத்தில் டில்லி விமான நிலையம் பரபரப்பு

டில்லி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பு

புதுடில்லி: தலைநகரான டில்லியில் சமீபத்தில் இடம்பெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலுக்கு பின்னர், பாதுகாப்பு அமைப்புகள் அதிரடியாக செயல்படுகின்றன. இந்த நிலையில், இண்டிகோ விமான நிறுவனத்தின் குறைகேட்பு (complaint) பக்கத்தில் டில்லி விமான நிலையத்தை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, டில்லி செங்கோட்டை அருகே கார் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. அதில் பலர் உயிரிழந்தனர். தேசிய பாதுகாப்பு முகமை (NIA) இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. தாக்குதலுக்குப் பின்னணி யாரென்பது குறித்து தொடர்ந்து விசாரணைகள் நடந்து வருகின்றன.

இந்த சம்பவத்துக்குப் பிறகு, டில்லியில் பல முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையம், ரயில் நிலையம், மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்பட்ட தகவல் பாதுகாப்பு அமைப்புகளை உச்சக்கட்ட எச்சரிக்கைக்கு உள்ளாக்கியது. அதனைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் வெடிகுண்டு தடுப்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முழுமையான சோதனைகள் மேற்கொண்டன. பின்னர், அந்த மிரட்டல் உண்மையற்றது என உறுதி செய்யப்பட்டது.

இதுபோன்ற மிரட்டல் செய்திகள் சென்னை, கோவா உள்ளிட்ட பிற நகரங்களின் விமான நிலையங்களிலும் வந்ததாகவும், அங்கும் அதேபோல் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version