Featured
Featuredஅரசியல்செய்திகள்தமிழகம்

விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது உப்பனாறு மேம்பாலம்: இறுதிக்கட்ட பணிகள் அதிவேகமாக தீவிரம்

*காமராஜர் சாலையில் இணைக்க பழைய பாலம் இடிப்பு

புதுச்சேரி : புதுச்சேரி நகரப் பகுதியான அண்ணா சாலை, காமராஜர் சாலை, மறைமலையடிகள் சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண உப்பனாறு வாய்க்கால் மீது மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த 2008ல் பணிகள் தொடங்கப்பட்டன.

உப்பனாறு வாய்க்காலில் மறைமலையடிகள் சாலை- காமராஜர் சாலையை இணைக்கும் வகையில் 700 மீட்டர் நீளத்துக்கு இப்பாலம் அமைக்கப்படுகிறது. பாலத்தின் இருபக்கமும் நடைபாதையுடன் சேர்த்தே இது அமைக்கப்படுகிறது.

காமராஜர் சாலை மற்றும் மறைமலையடிகள் சாலையில் பாலத்துடன் இணைக்கப்படாமல் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டது. ஏற்கனவே 2 முறை பாலப்பணி நிறுத்தப்பட்ட நிலையில், 3வது முறையாக பொதுப்பணித்துறை மூலம் ரூ.26 கோடி செலவில் தனியார் நிறுவனம் மூலம் காமராஜர் சாலை முதல் மறைமலையடிகள் சாலை வரை உப்பனாறு பாலத்தின் மீதமுள்ள பணிகளை முடிப்பதற்கும், பாலாஜி தியேட்டர் அருகேவுள்ள பழைய பாலத்தின் ஒருபகுதியை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்கவும் கடந்த மார்ச் 13ம் தேதி கவர்னர், முதல்வர் ஆகியோர் பூமிபூஜை செய்து பணிகளை மீண்டும் துவக்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து, காமராஜர் சாலையில் இருந்து 50 மீட்டரும், மறைமலையடிகள் சாலையில் இருந்து 50 மீட்டரும் என உப்பனாறு பாலத்துடன் சாலைகளை இணைக்கும் பணியும், பாலத்தின் இருபுறமும் 732 மீட்டர் நீளத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்கும் பணியும் துவங்கியது.

மறைமலையடிகள் சாலையில் தாவரவியல் பூங்கா எதிரேவுள்ள பாலத்துடன் உப்பனாறு மேம்பாலத்தை இணைக்கவும், காமராஜர் சாலையில் பாலத்துடன் உப்பனாறு மேம்பாலத்தை இணைக்கவும் கடந்த சில நாட்களாக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

காமராஜர் சாலையில் ஏற்கனவே இருக்கும் பாலத்தின் ஒரு பகுதியை (பெட்ரோல் பங்க் ஒட்டியுள்ள) இடித்து விட்டு, புதிய பாலம் கட்டப்பட வேண்டும். இதற்காக சாலையின் ஒருபுற பாலத்தை இடிக்கும் பணி நேற்று துவங்கியது.

இதனால் சாலையின் மறுபுறம் மட்டும் இருவழி போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல், மறைமலையடிகள் சாலையில் ஏற்கனவே உள்ள பாலம் வலுவாக இருப்பதால் அதே பாலத்துடன் உப்பனாறு பாலத்தை இணைக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கான பணிகளும் தற்போது நடந்து வருகிறது. உப்பனாறு மேம்பாலத்திற்கு ஓரிரு மாதத்திற்குள் விடிவுகாலம் வரப்போவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *