Featured
Featuredசெய்திகள்தமிழகம்மற்றவை

விருதுநகரில் மீண்டும் ஒரு வெடி விபத்து கோரத்தாண்டவம்: தொழிலாளி பலி; 9 பேர் படுகாயம்

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

9 பேர் காயமடைந்துள்ளனர்.

வெம்பக்கோட்டை அருகே உள்ள சத்திரப்பட்டியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான “எக்ஸெல்” பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிபொருள் கட்டுப்பாட்டு துறையின் அனுமதி பெற்ற இந்த பட்டா சாலையில் 50-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை வழக்கமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென ஒரு அறையில் பட்டாசு தயாரிப்பு பணியின் போது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. மேலும், உடனடியாக அங்கிருந்து பட்டாசு தொழிலாளர்கள் பலர் ஆலையில் இருந்து வெளிநர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலையில் பட்டாசுகள் வெடித்து சிதறின.

விபத்து குறித்து தகவலறிந்த வெம்பக்கோட்டை போலீஸார், வெம்பக்கோட்டை, சாத்தூர், சிவகாசி ஆகிய இடங்களில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் வீரர்களை அழைத்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், தாயில்பட்டி கலைஞர் காலனியை சேர்ந்த பாண்டி (38) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் படுகாயமடைந்த ராஜ்குமார், செல்வம், ரமேஷ், கருப்பசாமி, சாந்தி, (15 வயது சிறுமி) சந்தியா, ஜான்சி ராணி, ஜெயா, ராமலட்சுமி ஆகிய 9 தொழிலாளர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்தில் 10-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமானது. மேலும் பட்டாசு ஆலை வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 இருசக்கர வாகனங்களும் ஒரு வேனும் விபத்தில் சேதமடைந்தது. வெடி விபத்து ஏற்பட்ட ஆலையில் சிவகாசி சார் ஆட்சியர் முகமது இர்பான் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் உரிமம் புதுப்பிக்கப்படாமல் செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த வெம்பக்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *