மாஸ்கோ : இந்தியா உடனான வர்த்தகத்தை மேலும் அதிகரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்க அரசு கடுமையான வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்தியா உடனான வர்த்தகத்தை மேலும் அதிகரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இது குறித்து ரஷ்யாவின் சோச்சி பகுதியில் நடைபெற்ற சர்வதேச வால்டாய் கருத்தரங்கில் அவர் பேசியதாவது;-
“அமெரிக்காவின் வரிகளால் இந்தியா எதிர்கொள்ளும் இழப்புகள், ரஷ்யா உடனான கச்சா எண்ணெய் இறக்குமதி மூலம் சமன் செய்யப்படும். மேலும் ஒரு இறையாண்மை கொண்ட நாடாக, இந்தியா கவுரவத்தைப் பெறும். அதோடு, வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை நீக்க, இந்தியாவிடம் இருந்து அதிக விவசாய பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான வழிமுறைகள் குறித்து சிந்திக்குமாறு நான் ரஷ்ய அரசு துறைகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
ரஷ்யாவிற்கு இந்தியாவுடன் எந்தப் பிரச்சினையோ அல்லது பதற்றங்களோ ஒருபோதும் இருந்ததில்லை. இரு நாடுகளும் எப்போதும் தங்கள் உணர்திறன்களைக் கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சோவியத் யூனியன் காலத்தில் இருந்து, இந்தியா அதன் சுதந்திரத்திற்காகப் போராடிய காலத்தில் இருந்து, ரஷ்யா-இந்தியா உறவில் எப்போது ஒரு சிறப்புத் தன்மை இருந்து வந்திருக்கிறது. இந்தியா அதை மறக்கவில்லை என்பதை நாங்கள் பாராட்டுகிறோம். எனது நண்பர் மோடியுடனான பேச்சுவார்த்தைகள் மிகுந்த நம்பிக்கை அளிக்கின்றன. மோடி சமநிலையான, தேசிய சிந்தனையை உடைய தலைவர். இவ்வாறு புதின் தெரிவித்தார்