டில்லி கார் வெடிப்பு: சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு போலீசார் தீவிர விசாரணை
புதுடில்லி: தலைநகர் டில்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டை அருகே நேற்று மாலை சுமார் 6.50 மணியளவில், சிக்னலில் நின்றிருந்த ஒரு கார் திடீரென வெடித்தது. வெடிப்பின் தாக்கத்தில் அருகிலிருந்த வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.
இந்தச் சம்பவத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்; பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதே நாளில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பெரிய அளவில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது என்பதும் விசாரணைக்குரிய அம்சமாகியுள்ளது. இந்த இரு சம்பவங்களுக்கும் இடையில் தொடர்பு உள்ளதா என்பதை புலனாய்வு அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
சம்பவத்தைச் சுற்றி சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், போலீசார் கார் சென்ற இடங்களின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கார் சென்றதாக கூறப்படும் பல பார்க்கிங் இடங்கள், சுங்கச்சாவடிகள் மற்றும் முக்கிய சாலைகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட காட்சிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த காட்சிகளில் சந்தேக நபர் தனியாக காரில் பயணம் செய்தது தெரியவந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், தர்யாகஞ்ச் நோக்கி சென்ற பாதையில் கூடுதல் சான்றுகள் தேடப்பட்டு வருகின்றன. காட்சிகளில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் போலீசார் பல்வேறு வழிகளில் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.



























