லண்டனில் கைது செய்யப்பட்ட சீன கிரிப்டோ மோசடி தலைவி
லண்டன்: சீனாவில் பெரும் அளவிலான கிரிப்டோ நிதி மோசடியை மேற்கொண்டு தப்பிச் சென்ற ஒரு பெண், இங்கிலாந்தில் அடைக்கலம் புகுந்த நிலையில், தற்போது தண்டனையை எதிர்கொள்ள உள்ளார்.
2021ஆம் ஆண்டு, அந்தப் பெண் லண்டனில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர பங்களா ஒன்றை வாங்க முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்வது சந்தேகத்தை கிளப்பியது. இதனால், பிரிட்டன் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையின் போது, லண்டனின் ஹாம்ப்ஸ்டெட் ஹீத் பகுதியில் மாதம் பல லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து அவர் வசித்த வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது விலையுயர்ந்த நகைகள், பிரபல பிராண்டுகளின் ஆடைகள், மற்றும் ஆயிரக்கணக்கான பிட்காயின் தொடர்பான ஆவணங்கள், சேமிப்பு கருவிகள் (hard drives) ஆகியவை கைப்பற்றப்பட்டன.
அந்த பிட்காயின்களின் மொத்த மதிப்பு ரூ.50,000 கோடி என மதிப்பிடப்படுகிறது. மேலும், அவரிடம் இருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட பதிவுகளில், “ஐரோப்பாவில் சொத்துகள் வாங்குவது” மற்றும் “சொந்த நாட்டை உருவாக்குவது” போன்ற கனவுகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
விசாரணையில், “யாடி ஷாங்” என்ற பெயரில் வாழ்ந்து வந்த அந்த பெண் உண்மையில் ஷிமின் கியான் (47) எனும் சீன பிரஜை என்பது தெரியவந்தது. அவர், சீனாவில் “லான்டியன் கெருய்” என்ற நிறுவனத்தின் பெயரில் முதியோர் மற்றும் ஓய்வூதியதாரர்களை குறிவைத்து கிரிப்டோ முதலீட்டு மோசடி நடத்தியதாக குற்றச்சாட்டு உள்ளது.
“எளிதில் பணக்காரராகும் வாய்ப்பு” என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்றி, பல லட்சம் பேரிடம் இருந்து பெரும் தொகை வசூலித்ததாக கூறப்படுகிறது.
2017ஆம் ஆண்டு இந்த மோசடி வெளிச்சமடைந்ததும், ஷிமின் கியான் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நாடு விட்டு தப்பிச் சென்றார். பின்னர், 2023ல் லண்டனில் கைது செய்யப்பட்ட அவர், தற்போது சிறையில் இருக்கிறார். அவருக்கு எதிரான வழக்கில், சவுத்வார்க் கிரவுன் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்க உள்ளது.




























