Featured
Featuredஆன்மிகம்செய்திகள்தமிழகம்

Tulsimala wearing rules துளசி மாலை அணியப் போகிறீர்களா? அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள்

தீவிர ஆன்மீகத்தில் ஈடுபடுபவர்கள் துளசி மாலை, ருத்ராட்ச மாலை போன்றவற்றை அணிவதை பார்த்திருக்கிறோம். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதம் இருப்பவர்களும் துளசி மணி மாலை அணிந்தே விரதத்தை மேற்கொள்கிறார்கள். ருத்ராட்சம் மற்றும் ருத்ராட்ச மாலை பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் துளசி மாலை பற்றியும், அதை அணிவதற்கான முறை, அதை அணிந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், துளசி மாலையின் சிறப்புகள் பற்றி பலருக்கும் தெரியாது. அது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

உலகில் தெய்வீக சக்தி நிறைந்த சில புனிதப் பொருட்கள் உள்ளன. அவற்றில் மிகவும் உயர்ந்த புனிதம் கொண்ட ஒன்று, துளசி மாலை. பக்தி வழியில் செல்வோர் பலர் தங்கள் ஆன்மீக பயணத்தைத் தொடங்கும் போது துளசி மாலையை அணிவதை ஒரு புனிதமான தீர்மானமாக கருதுகின்றனர். இந்து மதத்தில் துளசி, மகாலட்சுமியின் அம்சமாகவும், பெருமாளுக்கு பிரியமான தெய்வீக செடியாகவும் போற்றப்படுகிறது. அதனால் துளசி மாலையை அணிவது என்பது வெறும் அலங்காரம் அல்ல. அது ஒரு ஆன்மீக ஒழுக்கத்தை ஏற்றுக் கொள்வது போன்ற ஒரு உறுதிமொழி.

துளசி மாலையின் ஆன்மீக அர்த்தம் :

பொதுவாக விஷ்ணு மற்றும் கிருஷ்ணரை வழிபடும் பக்தர்கள் துளசி மாலையை அணிகின்றனர். இந்த மாலை அணிவதன் மூலம் அவர்கள் தங்கள் மனதை அமைதிப்படுத்தவும், வாழ்க்கையில் ஆன்மீக முன்னேற்றத்தை அடையவும் விரும்புகிறார்கள். துளசி மாலை என்பது பக்தியின் அடையாளம், சரணாகதியின் சின்னம், ஆன்மீக ஒழுக்கத்தின் நினைவூட்டல் என்று கருதப்படுகிறது. துளசி மாலை அணிபவர்கள் தங்களை ஸ்ரீ கிருஷ்ணரிடம் முழுமையாக சரணடைந்தவர்கள் என்று உணர்கிறார்கள். எதிர்மறை சக்திகளிலிருந்து பாதுகாப்பு, பாரம்பரிய நம்பிக்கைகளின்படி துளசி மாலை மிகவும் சக்திவாய்ந்த ஆன்மீக அதிர்வுகளை கொண்டதாக கருதப்படுகிறது. எதிர்மறை ஆற்றல்களை, தீய சக்திகளை, சூனியம் போன்ற பாதிப்புகளை விலக்கி வைக்கும் சக்தி கொண்டதாக நம்பப்படுகிறது. மேலும் துளசி மாலை அணிவதால் மன அமைதி, பக்தி உணர்வு மற்றும் ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும் என்று பலர் நம்புகின்றனர்.

ஜெப மாலையாக துளசி :

துளசி மாலையை கழுத்தில் அணிவதுடன் அது ஜெப மாலையாகவும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக துளசி மாலையில் 108 மணிகள் இருக்கும். இந்த 108 மணிகளைக் கொண்டு,

“ஓம் நமோ பகவதே வாசுதேவாய”

“ஓம் நமோ வாசுதேவாய”

“ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே”

போன்ற மந்திரங்களை உச்சரிக்கும் போது அந்த மந்திரத்தின் சக்தி மனதிலும் ஆன்மாவிலும் ஆழமாக பதியும் என்று கூறப்படுகிறது.

துளசி மாலை எப்படி தயாரிக்கப்படுகிறது?

துளசி மாலை துளசி செடியின் வேர்கள், கிளைகள் மற்றும் மரப்பகுதிகள் மூலம் தயாரிக்கப்படுகிறது. சாஸ்திரங்களில் பொதுவாக இரண்டு வகையான துளசி மாலைகள் குறிப்பிடப்படுகின்றன. ராம துளசி மாலை மற்றும் ஷ்யாமா துளசி மாலை. இரண்டுக்கும் பலன்களில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் அவற்றின் நிறம், மணிகளின் வடிவம், சில அளவில் வேறுபடலாம். “ராம” மற்றும் “ஷ்யாமா” என்ற பெயர்கள் இரண்டும் விஷ்ணுவின் அவதாரங்களான ஸ்ரீ ராமரையும், ஸ்ரீ கிருஷ்ணரையும் குறிக்கும்.

துளசி மாலை அணியும் முன் செய்ய வேண்டியவை :

  • துளசி மாலையை வாங்கியவுடன் உடனே அணிந்து கொள்ளக் கூடாது. முதலில் அதை கங்கை நீரில் அல்லது பாலும் நீரும் கலந்து சுத்தம் செய்ய வேண்டும்.
  • பிறகு மாலையை துடைத்து, விஷ்ணு அல்லது கிருஷ்ணரின் படத்தின் முன் வைத்து பின்வரும் மந்திரங்களில் ஏதேனும் ஒன்றை குறைந்தது 8 முறை உச்சரிக்க வேண்டும்.
  • 1. ஓம் நமோ பகவதே வாசுதேவ

2. ஓம் நமோ வாசுதேவாய

  • பின்னர் பிரார்த்தனை செய்து துளசி மாலையை அணியலாம்.

துளசி மாலை அணிந்த பின் கடைபிடிக்க வேண்டியவை :

  • துளசி மாலை அணிவது ஒரு ஆன்மீக விரதம் போன்றது. அதனால் சில விதிமுறைகளை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
  • தீய பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்
  • துளசி மாலை அணிந்த பிறகு மது அருந்துதல், புகைபிடித்தல், போதைப் பொருட்கள், சூதாட்டம் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவை ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடையாக கருதப்படுகின்றன.
  • துளசி மாலை அணிபவர்கள் பிறரை அவமதிக்கக்கூடாது. பொய் பேசக்கூடாது, தகாத வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது, யாருடைய மனதையும் புண்படுத்தக்கூடாது
  • ஒருவர் அணியும் துளசி மாலையை மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது. மற்றவரின் துளசி மாலையையும் அணியக் கூடாது. ஏனெனில் அது தனிப்பட்ட ஆன்மீக பொருளாக கருதப்படுகிறது.
  • பாரம்பரிய முறைகளின்படி சில நேரங்களில் துளசி மாலையை கழற்றி வைக்க வேண்டும். அவை குளிக்கும் போது, கடுமையான உடற்பயிற்சி செய்யும் போது, உறங்கும் போது. இவற்றின் போது மாலை சேதமடையாமல் பாதுகாக்க வேண்டும்.
  • சில பாரம்பரிய நம்பிக்கைகளின்படி இறப்பு நிகழ்ச்சிகள், பூப்படைதல் சடங்குகள் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், துளசி மாலையை தற்காலிகமாக கழற்றி விட்டு செல்ல வேண்டும். திரும்பி வந்த பிறகு குளித்து சுத்தம் செய்து மீண்டும் அணியலாம்.

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *