Featured
Featuredஅரசியல்செய்திகள்தமிழகம்

விஜய் பெரம்பூர் தொகுதிக்கான வேட்புமனுவில் தவறு செய்திருந்தாலும்! அவரது வேட்புமனு ரத்தாகாதாமே! ஏன்?

சென்னை: சென்னை மாவட்டத்திற்குள்பட்ட பெரம்பூர் தொகுதியில் இன்று திருத்தியமைக்கப்பட்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்கிறார் விஜய்.

பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முரண்கள் இருப்பதால் திருத்தியமைக்கப்பட்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யப்படுகிறது.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் அவர் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரங்களில், தனக்கு எதிராக நிலுவையிலுள்ள குற்றவியல் வழக்குகள் குறித்த விவரங்கள் வேறுபடுகின்றன.

த.வெ.க. 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் நிலையில், விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் களம் காண்கிறார். கடந்த மார்ச் 30 அன்று பெரம்பூரிலும், அடுத்த நாள் திருச்சி கிழக்கிலும் தனது சொத்து மற்றும் நிலுவையிலுள்ள வழக்குகளின் விவரங்களுடன் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், பெரம்பூர் மனுவில் குற்ற வழக்குகளில்லை என அவர் குறிப்பிட, திருச்சி கிழக்கு மனுவில் இரண்டு வழக்குகள் இருப்பதாக அறிவித்துள்ளார்.

திருச்சி கிழக்கில் அறிவிக்கப்பட்ட முதல் வழக்கு, கடந்த மார்ச் 30ஆம் தேதி சென்னை பெரவள்ளூர் காவல் நிலையத்தில் பதிவானது. கொளத்தூர் தேர்தல் பரப்புரையில் இடையூறு ஏற்படுத்தியதாகப் பதிவான இந்த வழக்கு, பெரம்பூர் மனு தாக்கல் பின்னரே ஏற்பட்டதால் பெரியச் சிக்கலாகக் கருதப்படவில்லை. ஆனால், முக்கியப் பிரச்சனையாக மதுரையில் நடந்த மற்றொரு வழக்கு உள்ளது.

“கடந்த 21.08.2025 மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் தலைவர் விஜய் நடைமேடை (Ramp Walk) நடந்து வரும்போது தலைவரை பார்த்தவுடன் ஆர்வத்தில் நடைமேடையில் பலர் ஏறியதாகவும் அவர்களை விஜய் தரப்பினர் அசிங்கமாக பேசியும் இடித்து தள்ளியதில் நெஞ்சுக்காயம் மற்றும் உள்காயம் ஏற்பட்டதாக புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கு பற்றி காவல்துறையிடமிருந்து சம்மன் வரவில்லை; தற்போதுதான் விவரம் தெரியவந்ததால் திருச்சி கிழக்கு மனுவில் குறிப்பிடப்பட்டதாக விஜய் விளக்கமளித்துள்ளார்.

இந்த மதுரை வழக்கு குறித்த விவரங்கள் பெரம்பூர் வேட்புமனுவில் இடம்பெறாததுதான் பெரும் சவாலாகும். விஜய் உடனடியாக இந்த விவரங்களைச் சேர்த்து புதிய பிரமாணப் பத்திரத்தை பெரம்பூரில் தாக்கல் செய்ய வேண்டும். பரிசீலனைக்கு முன்னதாக இதைச் செய்யாவிட்டால், பெரம்பூர் தொகுதியில் அவரது வேட்புமனு ரத்தாகும் என சொல்லப்பட்டது.

மேலும் கட்சியின் தலைவரின் வேட்புமனுவையே இவ்வளவு கவனக்குறைவாகக் கையாண்டது குறித்து இணையவாசிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். “மற்ற வேட்பாளர்களின் நிலை குறித்து நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை” என்றும், “மாநிலம் முழுவதும் உள்ள குற்ற வழக்குகளின் விவரங்களைப் பெற உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்திருக்கலாமே” என்றும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

பெரம்பூரில் தனக்கு 52 வயது என்றும் திருச்சியில் தனக்கு 51 வயது என்றும் விஜய் குறிப்பிட்டிருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பெரம்பூரில் தாக்கல் செய்த வேட்புமனுவில் திருத்தியமைக்கப்பட்ட பிரமாண பத்திரத்தை இன்று விஜய் தாக்கல் செய்கிறார். அவர் நேராக செல்லவில்லை. அவர் யாரை முன்மொழிகிறாரோ அவர் போய் திருத்தியமைக்கப்பட்ட பிரமாண பத்திரத்தை (Affidavit) தாக்கல் செய்வார். இதனால் அவரது வேட்புமனு ரத்தாக வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது.

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *