சென்னை: நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில், கேரளாவைச் சேர்ந்த தனியார் தோட்ட நிறுவனம் ஒன்று நூற்றுக்கணக்கான ஏக்கர் அரசு நிலங்களையும் வன நிலங்களையும் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, இது குறித்துப் பதிலளிக்கத் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள நடுவட்டம் அழகான மற்றும் முக்கியமான கிராமம் ஆகும். இது ஊட்டிக்கும் கூடலூர் நகரத்திற்கும் இடையே பைக்காராவிற்கு அருகில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 6,000 அடி உயரத்தில் உள்ளதால், ஆண்டு முழுவதும் இதமான குளிர்கால நிலை இருக்கும். இந்த பகுதி அடர்ந்த காடுகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் மலைச்சரிவுகளால் சூழப்பட்ட நீலகிரியின் முக்கியமான கோடைவாசல் தலங்களில் ஒன்று.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், அப்போதைய வைசிராய் பிரபுக்கள் மற்றும் அதிகாரிகள் அடிக்கடி வந்து செல்லும் ஒரு முக்கிய ஓய்விடமாகவும் இது இருந்திருக்கிறது. தேயிலைத் தோட்டங்களால் சூழப்பட்ட, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒரு முக்கியப் பாதையாக இருக்கிறது.
இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் தி. வேல்முருகன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கிராமத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் அரசு நிலங்கள் மற்றும் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களை, கேரளாவைச் சேர்ந்த ஒரு தனியார் தோட்ட நிறுவனம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பல ஆண்டுகளாக இந்த நிலங்களை அந்த நிறுவனம் அனுபவித்து வருவதால், அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேல்முருகன் எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார். இந்த ஆக்கிரமிப்பிற்கு சில அரசு அதிகாரிகளும் துணையாக இருப்பதாக மனுவில் குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நீதிமன்றத்தை நாடியதாக வேல்முருகன் எம்எல்ஏ குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, இது குறித்து விரிவான விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.






























