Featured
Featuredஅரசியல்செய்திகள்தமிழகம்

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு, இலக்கியத் துறையில் வழங்கப்படும் மிகச் சிறந்த ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1972ஆம் ஆண்டு, வைகறை மேகங்கள் என்ற முதல் கவிதை நூலை வெளியிட்டு, தன்னுடைய இலக்கிய வாழ்வைத் தொடங்கிய கவிஞர் வைரமுத்து, எண்ணற்ற கவிதைத் தொகுப்புகளையும், நாவல்கள் உள்பட 40க்கும் மேற்பட்ட நூல்களையும் வெளியிட்டுள்ளார். அது மட்டுமின்றி, நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் இதுவரை 7,500க்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களை இயற்றியுள்ளார்.

சிறந்த திரையிசைப் பாடலுக்கான தேசிய விருதினை வைரமுத்து இதுவரை ஏழு முறை பெற்றிருக்கிறார். அதிகபட்சமாக 7 தேசிய விருதுகளை பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். இலக்கியத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கும் வைரமுத்துவுக்கு, நாட்டின் இலக்கியத் துறையில், மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழ் இலக்கியத் துறையில் இதுவரை 1975ஆம் ஆண்டு எழுத்தாளர் அகிலன், 2002ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகிய இரண்டு பேர் மட்டுமே ஞானபீட விருது பெற்றிருக்கிறார்கள். தற்போது தமிழகத்திலிருந்து மூன்றாவது கவிஞராக ஞானபீட விருதினை வைரமுத்து பெறுகிறார். 

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்துக்கு ஞானபீட விருது. காலையில்தான் கவிப்பேரரசைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். சற்றுநேரத்தில் இந்த இனிய செய்தி வந்தடைந்து, அந்தச் சந்திப்பின் இனிமையை இன்னும் கூட்டியிருக்கிறது.

தமிழில் இதுவரையில் அகிலனும் ஜெயகாந்தனும் மட்டுமே பெற்றிருந்த இவ்விருது, மரபுக் கவிதைகளிலும் நவீனத்திலும் விளையாடி, தமிழ் இலக்கிய உலகில் புதுமைகள் படைத்து ஆளும் நம் கவிப்பேரரசின் கைசேர்ந்து அவரையும் நம்மையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது. தலைவர் கலைஞர் இருந்திருந்தால் கவிப்பேரரசை உச்சிமுகர்ந்து பாராட்டியிருப்பார். அவரிடத்தில் நான் நின்று கவிப்பேரரசு வைரமுத்துவை வாழ்த்துகிறேன். கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *