புதுடில்லி:
டில்லி விமான நிலையத்தில், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சனை காரணமாக, நூற்றுக்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமடைந்தன.
அதிகாரிகள் தெரிவித்ததாவது, கட்டுப்பாட்டு மையத்தின் கணினி அமைப்பில் திடீர் சாப்ட்வேரில் கோளாறு ஏற்பட்டதால் விமான இயக்கம் சீர்குலைந்தது. இந்த சிக்கலை தீர்க்க தொழில்நுட்ப நிபுணர்கள் தற்போது தீவிரமாகப் பணிபுரிந்து வருகின்றனர்.
இதன் விளைவாக, டில்லி விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் அங்கு தரையிறங்க வேண்டிய பல உள்நாட்டு, சர்வதேச விமானங்கள் நேரத்திற்கு இயங்க முடியாமல் போனது. பயணிகள் எதிர்நோக்கும் சிரமத்துக்கு வருந்துவதாகவும், குறைபாடு விரைவில் சரிசெய்யப்பட்ட பின் புதுப்பிக்கப்பட்ட விமான அட்டவணைகள் வெளியிடப்படும் என்றும் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் வெளியிட்ட தகவலில், “டில்லி விமான போக்குவரத்து மையத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக எங்கள் சில விமான சேவைகள் தாமதமடைந்துள்ளன. பயணிகள் தங்களது விமான நிலையை எங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கலாம்,” எனக் கூறியுள்ளது.



























