Featured
Featuredஅரசியல்செய்திகள்தமிழகம்

கடலூரில் விஜய் பிரச்சாரம் ரத்து.. ரசிகர்கள் ஏமாற்றம்

கடலூரில் இன்று (ஏப்ரல் 11) விஜய் பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் திடீரென பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. மே நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2026 தேர்தலை இலக்காகக் கொண்டு நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாகப் போட்டியிடுகிறது.

எடப்பாடி தொகுதியைத் தவிர மீதமுள்ள 233 தொகுதிகளிலும் அக்கட்சி சார்பில் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகள் என இரண்டு இடங்களில் நடிகர் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக விஜய் வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

வேட்பு மனு தாக்கல் செய்த விஜய், பெரம்பூர் மற்றும் கொளத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து வில்லிவாக்கத்தில் பிரச்சாரத்திற்கு காவல்துறையினர் ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கியதால், அந்தப் பிரச்சாரத்தை விஜய் ரத்து செய்தார். இதையடுத்து திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சாரங்களை மேற்கொண்டார். நேற்று காரைக்குடியில் பிரச்சாரக் கூட்டத்தில் பேச திட்டமிட்டிருந்த நிலையில், மதுரை விமான நிலையத்திலிருந்து ரோட் ஷோவாக விஜய் காரைக்குடிக்குச் சென்றார். ஆனால் விஜய் வரும் வழியில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதால், பிரச்சாரக் கூட்டம் நடைபெற இருந்த இடத்திற்கு விஜய் வந்து சேர காலதாமதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பேசாமலேயே விஜய் புறப்பட்டுச் சென்றார். இது விஜய் ரசிகர்களிடையே கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று கடலூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்தார். ஆனால் திடீரென விஜய்யின் இன்றைய பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னதாக, விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி பெற்றதால், வடலூரில் இன்று மாலை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவிருந்த பிரச்சாரக் கூட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இந்தச் சூழலில், நேற்றிரவு தமிழக வெற்றிக் கழகத் தரப்பில் “நிர்வாகக் காரணங்களால்” நடிகர் விஜயின் இன்றைய பிரச்சாரப் பயணம் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *