Featured
Featuredஅரசியல்செய்திகள்தமிழகம்

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவிருக்கிறது. மே.4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடுகள் என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

திமுகவில் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், மதிமுகவுக்கு 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2, கொமதேகவுக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இன்று (மார்ச்.18) இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொகுதிப் பங்கீடு இறுதியானதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த மு.வீரபாண்டியன், “கடந்த முறையைவிட இத்தேர்தலில் எங்களுக்கு கூடுதல் இடங்கள் வேண்டும் என்று திமுகவிடம் கோரினோம். ஆனால் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெரியண்ணன் மனப்பாண்மையில் திமுக ஒருபோதும் நடந்தது இல்லை. தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் திமுக நிர்பந்திக்கவில்லை. கட்டளையிடவில்லை. அழுத்தம் தரவில்லை. மாறாக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகள் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதால் ஓரணியில் சேர்ந்துள்ளோம்.” என்றார்.

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *