Featured
Featuredசெய்திகள்தமிழகம்

ஊட்டியில் நிஜ மஞ்சுமெல் பாய்ஸ் த்ரில்லர்! 150 அடி பள்ளத்தில் ரியல் சுபாஷ்.. திக் திக் நிமிடங்கள்

ஊட்டியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட பாணியில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. நீண்ட நேரத்திற்கு பிறகு இளைஞர் மீட்கப்பட்ட சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தில் கொடைக்கானல் குணா குகையில் விழுந்த நண்பனை மீட்க அந்த நண்பர்கள் பட்ட பாட்டை திரையில் பார்த்து நாம் மிரண்டு போயிருப்போம். ஆனால், அதே போன்ற ஒரு பகீர் சம்பவம் நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊசிமலையில் (Needle Rock) அரங்கேறியுள்ளது. அந்த மரணக்குழியில் விழுந்தவர் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுருநாதன்.

150 அடி பள்ளம்.. காத்திருந்த எமன்!

செங்கல்பட்டிலிருந்து நீலகிரிக்கு சுற்றுலா வந்த சிவகுருநாதன், ஊசிமலை காட்சிமுனையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சுமார் 150 அடி ஆழம் கொண்ட ஒரு செங்குத்தான பள்ளத்தில் தவறி விழுந்தார். ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தின் சுபாஷைப் போலவே, சிவகுருநாதனும் அந்த இருண்ட ஆழத்திற்குள் மாயமானார்.


விடிய விடிய நடந்த ‘குணா குகை’ பாணி மீட்பு

தகவல் அறிந்ததும் கூடலூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 150 அடி ஆழம், செங்குத்தான பாறைகள், விஷ ஜந்துக்கள் நடமாடும் அடர்ந்த புதர்கள் என மீட்புக் குழுவினருக்கு ஒவ்வொரு அடியும் சவாலாக இருந்தது. இரவு நேரம் என்பதால் கடும் குளிர் மற்றும் போதிய வெளிச்சமின்மையால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இருந்தாலும், ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தில் வரும் குட்டேட்டன் (சௌபின் ஷாகிர்) பாணியில், தீயணைப்பு வீரர்கள் கயிறுகள் கட்டி தைரியமாக அந்த இருண்ட பள்ளத்திற்குள் இறங்கினர். சுமார் 13 மணிநேரத் தொடர் போராட்டத்திற்குப் பிறகு, இன்று அதிகாலை சிவகுருநாதன் பத்திரமாக மீட்கப்பட்டார். அவர் உயிருடன் மேலே கொண்டு வரப்பட்ட அந்த நொடி, அங்கு குழுமியிருந்த நூற்றுக்கணக்கான மக்களும் கண்ணீர் மல்க கைதட்டி வரவேற்றனர்.

சிவகுருநாதனுக்கு மறுபிறவி

உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சிவகுருநாதனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, உடனடியாக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டிலிருந்து சுற்றுலா வந்த இடத்தில் மரணத்தின் விளிம்பிற்குச் சென்று மீண்டு வந்துள்ள சிவகுருநாதனுக்கு இது ஒரு ‘மறுபிறவி’ என்றே சொல்லலாம்.

சுற்றுலாப் பயணிகள் இதுபோன்ற அபாயகரமான பகுதிகளில் ஆர்வக்கோளாறால் தடுப்பு வேலிகளைத் தாண்ட வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் மீண்டும் எச்சரித்துள்ளது.

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *